குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருநல்லூர்

இறைவன் : கல்யாணசுந்தரேஸ்வரர்

இறைவி : கிரிசுந்தரி அம்மையார்

தலவிருட்சம் : வில்வமரம்

தலதீர்த்தம் : சப்தசாகரம்

வண்ணமலரானும் வையம் அளந்தாலும்
நண்ணலரியானை நல்லூர்ப் பெருமானை
தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே
-ஞானசம்பந்தர்
கொட்டும் பறைசீரால் குழும அலநேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே
-திருஞானசம்பந்தர்

12 ஆண்டுக்கொருமுறை மகாமகம் வருகிறது இது கும்பகோணத்துச் சிறப்பு. சரி ஓவ்வொரு வருடமும் மாசி மகம் வருகிறது. அது எங்கு சிறப்புதெரியுமா? அந்த சிறப்புடையத் தலம் திருநல்லூர். இதுவே மகம் பிறந்தது நல்லூரில் மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என பேச்சு வழக்காக உள்ளது.

இத்தலத்து இறைவனை எண்ணும் அடியார்க்கு இல்லை இடுக்கணே என்று பாடுகிறார் ஞானசம்பந்தர். சப்தசாகரம் (ஏழுகடல்) எனும் சிறப்புடைய திருக்குளத்துடன் கூடிய இக்கோயில் 70 மாடக்கோயில்களைக் கட்டிய கோட்செங்கட்ச்சோழனால் கட்டப்பட்டது. இரண்டு திருச்சுற்றுக்களுடன் கட்டுமலைக் கோயிலாக விளங்கும் இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாகும். இவர் மூலலிங்கமூர்த்தி ஆண்டார் ஆவார். இதில் உள்ள அருட்குறி (பாணம்) ஒரு நாளைக்கு இந்து நேரங்களில் 5 வித நிறமாய் மாறுவது பேரதிசயமாய் உள்ளது.

இன்றும் முதல் ஆறு நாழிகை தாமிரநிறம்(6-12), இளம் சிகப்பு(12-18நாழிகை), உருக்கிய தங்கம் (18-24நாழிகை), நவரத்தினப்பச்சை(24-30நாழிகை) இன்னநிறமெனக் கூற இயலாததாய் ஐந்து வித நிறங்களுடன் திருவருள் புரிவதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அகத்தியருக்கு இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டி அருளியதால் கல்யாணசுந்தரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கண்கொள்ளக் காட்சியாக திருமணக் கோலம் சுதைவடிவில் லிங்கத்தின் பின்னால் உள்ளது.

அருட்சக்தியாய் கிரிசுந்தரி அம்பிகையும் சுவாமிக்கு வடகிழக்கில் தென்முகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். அனைவரும் நிச்சயம் காணவேண்டிய அற்புதமாய் செப்புத் திருமேனியில் எட்டுகரங்களுடன் ஆடும் சதுரத்தாண்டவ நடராசர் பேரழகுடன் பேருருவாய் விளங்குகிறார். நல்லூர் நடராசர் என்ற சிறப்புப் பெயருடன் நம் நாட்டவரால் மட்டுமின்றி வெளிநாட்டவராலும் புகழப்படும் இவ்வடிவம் சிற்ப இலக்கணம் முழுவதும் அமையப்பெற்ற தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண்முடியாத ஒன்றாகும்.

தலவரலாறு
இத்தலபுராணம் மிகவும் சிறப்புடையது. அதனை சிவபெருமான் முருகனுக்கும், முருகன் நந்தி தேவருக்கும், நந்தி தேவர் சனற்குமாரருக்கும், சனற்குமாரர் வியாசருக்கும், வியாசர் மற்றைய முனிவர்களுக்கும் கூறியதாக புராணம் கூறுகின்றது.

முன்னொரு சமயம் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் நடந்த யார் பெரியவர் என்ற பலப்பரிச்சையில் ஆதிசேஷன் மேரு மலையை இறுக்கி பிடித்துக்கொள்ள வாயுபகவான் அதிவேகமாக பெருகாற்றை வீசினார். அப்போது வீசிய பெருக்கற்றை படமெடுத்து ஆதிசேஷன் தடுக்க அனைவரும் காற்றில்லாமல் தவிக்க தேவர்கள் ஆதிசேஷனிடன் வேண்டினர். அதன்படி ஆதிசேஷன் படத்தை சுருக்கிக்கொள்ள தங்கியிருந்த பெருங்காற்றின் வேகத்தால் இருகொடு முடிகள் பெயர்ந்து ஒன்று (சுந்தரகிரி) இத்திருநல்லூரிலும் மற்றொன்று (மணிகூடகிரி) ஆவூரிலும் விழுந்தது. இத்தலத்தில் சுந்தரகிரியின் உச்சியில் ஒரு வில்வமரத்தடியில் சிவபெருமான் சுயம்பு வடிவாகத் தோன்றியருளினார்.

மேலும்
1. பிரம்மன் பூசித்த பேறு பெற்றஸ்தலம்
2. அகத்தியருக்கு திருமண கோலம் காட்டியருளியஸ்தலம்
3. தேவர்கள் திருவைந்தெழுத்தின் பெருமை உணர்ந்த ஸ்தலம்
4. திருமால் நரசிங்க வடிவம் நீங்கப் பெற்ற ஸ்தலம்
5. தற்போது திருவாரூரில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் தியாகராசப் பெருமானை முசுந்தன் இந்திரனிடமிருந்து பெற்று வரும் போது இத்தலத்தில் இறைவனின் அருளாணைப்படி 3 தினங்கள் வைத்து பூசித்த பின்னரே திருவாரூர் எடுத்துச் சென்றார்.

இவ்வாறு மூர்த்தி தலம் தீர்த்தம் என முச்சிறப்புகளும் உடைய இத்தலம் ஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசாலும் தேவாரத்தில் அருணகிரிநாதரால் திருப்பூகழிலும் பாடல் பெற்ற ஸ்தலாமாகவும் விளங்குகிறது. அமர்நீதி நாயனாருக்கு உமாபதியாகக் காட்சியளித்து முக்தியருளிய ஸ்தலமாகவும் விளங்கிறது திருநல்லூர்.

நல்லூரனைத் தரிசித்து நலம் பெறுவோம்
இப்புண்ணிய ஸ்தலம் தஞ்சாவூர், கும்பகோணம் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் வாழைப் பழக்கடையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon