திருவிடைமருதூர்

 

திருத் தலச்சிறப்பு

மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றானும் சிறப்புடைய திருத்தலம் திருவிடைமருதூர் ஆகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மயிலாடுதுறை வழித்தடத்தில் திருவிடைமருதூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்திற்குப் பேருந்து மூலமாக அல்லது புகைவண்டி மூலமாக வரலாம்.

திருவிடைமருதூர் திருத்தலத்தை திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் கருவூர்தேவர் பட்டினதடிகள் அருணகிரிநாதர் கவிகாளமேகம் ஆகியோர் அருந்தமிழ்ப்பாக்களால் பாடிப் பரவி உள்ளனர். இத்தலம் பாடல்பெற்ற திருத்தலமாகும்.

 

இத்தலத்தில் வரகுண பாண்டியன் பத்திரகிரியார் ஸ்ரீதர் ஐயாவாள் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் நான்கு தேரோடும் வீதி நான்கு மடவிளாகம் கொண்டு அழகிய ஊராக விளங்குகிறது. தேரோடும் வீதிகளில் கீழைவீதியில் அருள்மிகு விஸ்வநாதர் ஆலயமும் தெற்கு வீதியில் அருள்மிகு ஆத்மநாதர் ஆலயமும் மேலை வீதியில் அருள்மிகு ரிஷிபுரீஸ்வரர் ஆலயமும் வடக்கு வீதியில் அருள்மிகு சொக்கநாதர் ஆலயமும் அமைய நடுநாயகமாக அருள்மிகு மகாலிங்கப் பெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆதலால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்று போற்றப்பெறுகிறது.மேலும் நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்கள் அமைய நடுநாயகமாக திருவிடைமருதூர்த் திருத்தலம் அமைந்துள்ளது. கிழக்கே பாணாபுரமும் அருள்மிகு பாணாபுரீஸ்வரர் திருக்கோயில் தெற்ககே திருநீலக்குடி அருள்மிகு மனோக்கிய நாத சுவாமி திருக்கோயில் மேற்கே திருபுவனம் அருள்மிகு கம்பஹரேஸ்வரர் திருக்கோயில் வடக்கே இடங்கொண்டீச்சுரம் (கல்யாணபுரம்) அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில் ஆகிய தலங்கள் நான்கு திக்கிலும் அமைந்துள்ளது.

 


மத்தியார்ச்சுனம்:
இத்தலத்திற்கு வடமொழியில் மத்தியார்ச்சுனம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. வடக்கே மல்லிகார்ச்சுனம் (ஸ்ரீசைலம்) தெற்கே ஸபுடார்ச்சுனம் (திருப்புடைமருதூர்) இவ்விரு தலங்களுக்கு இடையே இத்தலம் அமைந்திருப்பதால் மத்தியார்ச்சுனம் என்று வழங்குகிறது. அர்ச்சுனம் - மருதமரம் என்று பொருள்.

பன்னிரு பெயர்கள்:
சண்பகாரண்யம் சந்திபுரம் வில்வவனம் தபோவனம், ஜோதிபுரம், சர்வதீர்த்தபுரம், செல்வவிருத்திபுரம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், இடைமருது, வீரசோழபுரம், நைமிசாரண்யம் எனப் பன்னிரு பெயர்கள் இத்தலத்திற்கு வழங்குகின்றன.

 

காசிக்கு நிகரான தலம் :
காசிக்கு நிகரான தலங்களாகப் பதினொரு சிவத்தலங்களைக் குறிப்பிடுவர். அப்பதினொரு சிவத்தலங்களில் திருவிடைமருதூர் திருத்தலம் (மத்தியார்ச்சுனம்) ஒன்றாகும். இத்தலம் காவிரியின் தென்கரைத் தலமாகும்.

பரிவாரத் தலங்கள்:
இத்திருத்தலத்திற்கு திருவாவடுதுறை (நந்தி), திருவலஞ்சுழி (விநாயகர்), சுவாமிமலை (முருகன்), திருவாரூர் ( சோமாஸ்கந்தர்), சிதம்பரம் (நடராஜர்), ஆலங்குடி ( தட்சிணாமூர்த்தி), சிர்காழி (பைரவர்), திருவாய்ப்பாடி (சண்டீசர்), சூரியனார்கோவில் (நவகிரகம்) ஆகிய தலங்கள் பரிவாரத் தலங்களாக விளங்குகிறன.

 

இறைவன், இறைவி திருநாமம் :
இறைவன் திருநாமம் மகாலிங்கம், திருமுறைகளில் இடைமருதன், மருதவாணர் என்று அழைக்கப்பெறுகிறது. கல்வெட்டில் திருவிடைமருதுடையார் என்று குறிப்பிடப்படுகிறது. அம்பிகையின் திருநாமம் வடமொழியில் பிரகத்சுந்தர குசாம்பிகை என்பதாகும். தமிழில் பெருநலமா முலையம்மை என்பதாகும். திருஞானசம்பந்தர் இத்தலப்பதிகத்தில் ' பெருநலமுலையிணை பிணைசெய்த பெருமான் ' என்று அம்பிகையின் திருநாமத்தை குறிக்கின்றனர். ஸ்ரீ மூகாம்பிகை தவநிலையில் காட்சி அருளுகின்றார். இவ்வன்னை சோழர்காலக் கல்வெட்டில்

 

' யோகிருந்த பரமேஸ்வரி' என்று குறிப்பிடப்படுகிறார். ஆண்டவிநாயகர் இத்தலவிநாயகர் ஆவார். கல்வெட்டில் ' புராண கணபதி' என்று குறிப்பிடப்படுகிறார். ஆண்ட விநாயகர் பூசித்ததாகப் புராணவரலாறு , ஆதலால் அருள்மிகு மாலிங்கப் பெருமானுக்கு அபிடேகம், நைவேத்தியம், தீபாராதனை நடைபெறுவது இத்தலச்சிறப்பாகும். இத்தலத்தில் சோமாஸ்கந்தரை ஏகநாயகர் என்றும் நடராசரை மாணிக்கக்கூத்தர் என்றும் கல்வெட்டுகள் குறிக்கிற்ன.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon