குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருக்கொட்டையூர்

இறைவன் : ஸ்ரீகோடீஸ்வரர்

இறைவி : பந்தாடுநாயகி

தீர்த்தம் : காவேரி ஆறு, அமுதக்கிணறு கோடி தீர்த்தம்

தலவிருட்சம் : கொட்டைச்செடி (ஆமணக்கு)

கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
-திருஞானசம்பந்தர்

கொட்டையூர்
கொட்டைச்செடி என்றும் ஆமணக்கு நிறைந்த ஊராக இருந்ததால் கொட்டையூர் எனப்பெயர் பெற்றது.
கோட்டீச்சுரமேய குழகன் சுழல் போற்றி
பந்தார் விரலம்மை பதமலரினை போற்றி

பரத்யோகி என்னும் முனிவருக்கு இறைவன் கோடி லிங்கமாக, கோடி விநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி சண்டீசராகக் காட்சியளித்ததால் இத்தல மூர்த்திகளை தரிசித்தால் ஐந்துகோடி மூர்த்திகளை தரிசித்த பலன் உண்டு. இத்தலத்தில் செய்த புண்ணியங்கள் கோடியாகப் பெருகும். கொட்டையூரிற் செய்த பலன் கட்டையூடே என்றொரு பழமொழியும் உண்டு. இக்கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் தத்தமக்குரிய வாகனங்களுடன் அமைந்திருப்பது பெரும் சிறப்புக்குறியது.

ஏரண்ட முனிவர்
ஏரண்டம்-கொட்டைச்செடி. இச்செடியின் அடியிருந்து தவமும் சிவபூஜையும் செய்து அருள்பெற்றவர் ஏரண்ட முனிவர். இவர் அத்திர முனிவரின் புதல்வனான ஆத்திரேயர் ஆவார். ஏராண்டச் செடியின் அடியிலிருந்து தவம் செய்ததால் ஏராண்ட முனிவர் எனும் பெயர் உண்டாயிற்று திருவலஞ்சுழியில் பிலத்தில் புகுந்த காவிரி வெளிவரவில்லை. உண்மையான ஒரு முனிவர் பிலத்துள் புகுந்து தம்மைத் தியாகம் செய்தால் காவிரி வெளிவரும் என்ற நிலை. அரித்துவசன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கினங்க ஏராண்ட முனிவர் பிலத்துள் புகுந்து தம்மை தியாகம் செய்து காவிரியை வெளிக்கொணர்ந்தார். இவர் தவம் செய்த இடம் ஏரண்டபுரம்.

தலத்தைப் பற்றிய நூல்கள்:
திருநாவுக்கரசுப் பெருமான் திருவலஞ்சுழி, கொட்டையூர் ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து திருப்பதிகம் ஒன்று அருளியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது. 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இத்தலத்தில் தோன்றிய பெரும் புலவர் சிவக்கொழுந்து தேசிகரால் கோடீச்சுரக்கோவை ஒன்றும் இயற்றப்பட்டுள்ளது.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon